சுற்றுலா வருமானம் கிராமிய சிறு தொழில் முயற்சியாளர்களையும் சென்றடைய வேண்டும்

Admin
By
Admin
4 Min Read

சூழலுக்கும் கலாசாரத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், உள்ளூர் சமூகங்களை வலுவூட்டும் சூழல் நட்புடைய சுற்றுலா அணுகுமுறையை ஊக்குவித்து, சுற்றுலா வருமானம் கிராமிய சிறு தொழில் முயற்சியாளர்கள் வரை நியாயமான முறையில் சென்றடைவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாகும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மேல் மாகாண நிகழ்வில் கலந்துகொண்டபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

2026 உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மேல் மாகாண சுற்றுலா சபையும் களனி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் பட்டப்பின்படிப்பு நிறுவகமும் இணைந்து ஏற்பாடு செய்த “நிலையான கலாசாரத்துடன் இணைந்த சுற்றுலாத் துறையில் டிஜிட்டல் புத்தாக்கத்திற்கான தேசிய மாநாடு”, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் நேற்று முன்தினம் (27) மேல் மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

“சுற்றுலாத் துறையை மீள்வடிவமைப்பதற்கான டிஜிட்டல் நிகழ்ச்சி நிரலும் செயற்கை நுண்ணறிவும்” (Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism) என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மேல் மாகாண சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட டிஜிட்டல் போட்டியில், பாடசாலை சுற்றுலா மற்றும் சுற்றுலாக் கழகப் பிரிவுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை பிரதமர் இதன்போது வழங்கிவைத்தார். அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள ‘அலவல’ சமூக அடிப்படையிலான நிலையான சுற்றுலா கிராமத்திற்காக, மேல் மாகாண சுற்றுலா சபையும் இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனமும் இணைந்து உருவாக்கிய புதிய தொழில்நுட்ப Smart Tourism Platform ஒன்றும் பிரதமரின் பங்கேற்புடன் இம்மாநாட்டில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர்,

“இலங்கை என்பது பல நூற்றாண்டுகளாக மனித படைப்பாற்றல், அறிவு, பாரம்பரிய அறிவு மற்றும் கலாசாரப் பன்மைத்துவத்தால் வளம்பெற்ற தனித்துவமான பாரம்பரியத்தைக் கொண்ட நாடாகும். இந்த வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, நாட்டின் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திக்கு அதனைச் செயற்திறமாகப் பங்களிக்கச் செய்வது நம் அனைவரது தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ள கட்டாயமான தேசியப் பொறுப்பு என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

எமது ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்தின் பிரதான நோக்கம், நாட்டின் அனைத்து துறைகளையும் நவீன தொழில்நுட்பம் மற்றும் உண்மையான மறுசீரமைப்புகளால் வலுப்படுத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதாகும். 2024ஆம் ஆண்டு முதல் இதுவரை சுற்றுலாத் துறையில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். 2024ஆம் ஆண்டில் இலங்கைக்கு 20 இலட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள், அதாவது 2.05 மில்லியன் பேர் வருகை தந்ததுடன், அதன் மூலம் 3.17 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் நாட்டிற்குக் கிடைத்தது. அந்த வெற்றியை மேலும் முன்னெடுத்துச் சென்று, 2025ஆம் ஆண்டில் 23 இலட்சத்து 62 ஆயிரத்து 521 (2,362,521) சுற்றுலாப் பயணிகள் எமது நாட்டிற்கு வருகை தந்தனர். அதன் மூலம் 3.22 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு வருமானத்தை ஈட்ட முடிந்தது.” எனத் தெரிவித்தார்.

2030ஆம் ஆண்டளவில் வருடாந்தம் 4 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைத்து, 8 பில்லியன் அமெரிக்க டொலர் சுற்றுலா வருமானத்தை ஈட்டுவதே அரசாங்கத்தின் இலக்கு என பிரதமர் தெரிவித்தார்.

அந்த இலக்கை அடைவதற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடம் காணப்படும் அறிவை நடைமுறை சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்திற்காக நேரடியாகப் பயன்படுத்த வேண்டும் எனவும், அரச மற்றும் தனியார் துறைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மரபுரிமைகள் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய தரப்பினர் ஒன்றிணைந்து புத்தாக்கங்களை நடைமுறைத் தீர்வுகளாக மாற்ற வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.

அத்துடன், இளைஞர் தலைமுறையினரையும் பாடசாலை மாணவர்களையும் டிஜிட்டல் தொழில்நுட்பம், படைப்பாற்றல் மற்றும் உள்ளூர் கலாசாரப் பாரம்பரியம் தொடர்பான அறிவினால் வலுப்படுத்துவது எதிர்கால நிலையான சுற்றுலாத் துறையின் அடித்தளமாக அமைய வேண்டும் எனத் தெரிவித்த பிரதமர், புதிய கல்வி மறுசீரமைப்புகள் மூலமும் சுற்றுலாத் துறைக்கு அதிக கவனம் செலுத்தப்படுவதாகக் குறிப்பிட்டார். சுற்றுலாத் துறையை எதிர்காலத்திற்கு முக்கியமான ஒரு தொழில்துறையாகக் கருதி, அதனை ஒரு தொழில் வாய்ப்புத் துறையாக நோக்குமாறும் பாடசாலை மாணவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

மேலும், சூழலுக்கும் கலாசாரப் பாரம்பரியங்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், உள்ளூர் சமூகங்களை வலுவூட்டும் சூழல் நட்புடைய சுற்றுலாத் துறையை உருவாக்குவது அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்புகளில் ஒன்றாகும் எனவும், அதன் மூலம் சுற்றுலா வருமானத்தின் நன்மைகள் கிராமிய சிறு தொழில் முயற்சியாளர்கள் வரை நியாயமான முறையில் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் கொழும்பு மாவட்ட சுற்றுலா உபகுழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமசந்திர, களுத்துறை மாவட்ட சுற்றுலா உபகுழுத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டிஆரச்சி, மேல் மாகாண, உள்ளூராட்சி மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் ஏ.எஸ்.டீ. சதீகா, மேல் மாகாண சுற்றுலா சபையின் தலைவர் கலாநிதி மஹேஷ் பிரியதர்ஷன உள்ளிட்ட சுற்றுலா சபை உறுப்பினர்கள், சுற்றுலா மற்றும் தொல்லியல் துறைகளைச் சேர்ந்த அறிஞர்கள், அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *