– ஓட்டப் போட்டிகள் மு.ப. 7 மணிக்கு முன் ஆரம்பிக்கப்பட வேண்டும்
இலங்கையின் கலாச்சார விழுமியங்களுடன் பின்னிப்பிணைந்துள்ள திருவிழாக்களின் போது ஏற்பாடு செய்யப்படும் விளையாட்டு நிகழ்வுகளில் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் திடீர் மருத்துவ அவசர நிலைகளைத் தடுப்பதற்கான விரிவான வழிகாட்டுதல்கள் அடங்கிய கையேட்டை சுகாதார அமைச்சின் தொற்ற நோய்கள் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ளது.
சித்திரைப் புத்தாண்டு உள்ளிட்ட விசேட காலப்பகுதிகளில் பெருமளவான மக்கள் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒன்றுகூடுவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த இரண்டாம் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தலை அணைச் சண்டை, வழுக்கு மரம் ஏறுதல், முட்டி உடைத்தல் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் முதல் மாரத்தான் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டிகள் போன்ற நவீன விளையாட்டு நிகழ்வுகள் வரை இந்த வழிகாட்டல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
போட்டிகளில் பங்குபற்றுவோரின் உடல் தகுதி குறித்து இவ்வழிகாட்டலில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீண்ட நேரம் நடைபெறும் போட்டிகளான மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்பவர்கள் குறைந்தபட்சம் 6 வாரங்களுக்கு முன்னரே உரிய கண்காணிப்பின் கீழ் பயிற்சியைத் தொடங்க வேண்டும்.
800 மீற்றருக்கு மேற்பட்ட நீச்சல் போட்டிகள் மற்றும் நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் பங்கேற்பவர்கள் போட்டிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகத் தகுதிவாய்ந்த மருத்துவ அதிகாரி மூலம் முறையான மருத்துவ பரிசோதனைக்கு (PCMA) உட்படுத்தப்பட்டு சான்றிதழ் பெறுவது அவசியமாகும்.
மேலும், போட்டிகளின் போது மதுபானம் அருந்திவிட்டு பங்கேற்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், முறையான உடல் நீர்ச்சத்தைப் (Hydration) பேணுவதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விளையாட்டு மைதானங்கள் மற்றும் உபகரணங்களின் பாதுகாப்பு குறித்து அமைப்பாளர்கள் முக்கிய கவனத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போட்டிகள் தொடங்குவதற்கு முன்னர் மைதானத்தின் தரை அமைப்பு, போதிய வெளிச்சம் மற்றும் தடைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
விளையாட்டு நடைபெறும் மைதானத்தில் முறையான முதலுதவி நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதுடன், அங்கு அடிப்படை உயிர் காக்கும் (BLS) பயிற்சியுள்ள ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும்.
அவசர மருத்துவத் தேவைக்காகப் பாதிக்கப்பட்டவரை முதுகைப் பாதிக்காத வகையில் கொண்டு செல்லக்கூடிய அம்பியூலன்ஸ் அல்லது உரிய வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.
தற்போது நிலவும் வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு, மரதன், சைக்கிள் ஓட்டப் போட்டிகள் போன்ற நீண்ட நேர நிகழ்வுகளை அன்றைய தினம் மு.ப. 7.00 மணிக்கும் முன்னதாகவே ஆரம்பிக்க வேண்டும் எனச் சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இது போட்டியாளர்கள் அதிக வெப்பத்தினால் களைப்படைவதையும் நீரிழப்பு ஏற்படுவதையும் பெருமளவில் குறைக்கும்.
அத்துடன் மைதானத்தில் போட்டியாளர்களுக்காகப் போதிய அளவு நிழலான ஓய்வெடுக்கும் இடங்களும், குடிநீர் மற்றும் கனிப்பொருள் அடங்கிய பான வசதிகளும் (Electrolytes) ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
குறிப்பிட்ட சில பாரம்பரிய விளையாட்டுகளுக்கான பிரத்தியேக விதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. தலை அணைச் சண்டையில் பயன்படுத்தப்படும் தலையணையின் எடை 650 கிராமுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும் என்பதுடன், அதன் உள்ளே கடினமான பொருட்கள் இருக்கக்கூடாது.
வழுக்கு மரம் ஏறும் போட்டியில் பயன்படுத்தப்படும் மரம் மற்றும் கிறீஸ் நச்சுத்தன்மையற்றதாக இருக்க வேண்டும் என்பதுடன், மரத்தின் உயரம் 20 அடியாக இருப்பின் அது 5 அடி ஆழத்தில் நிலத்தில் ஊன்றப்பட்டிருக்க வேண்டும்.
நீச்சல் மற்றும் படகோட்டப் போட்டிகளின் போது பாதுகாப்பு அங்கிகள் (Life Jacket/PFD) அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், நீரில் முதலைகள் அல்லது வேறு ஆபத்துகள் குறித்து முன்கூட்டியே ஆய்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.




