ஈரான் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த ஒரு காலக்கெடுவை நீடிக்குமாறு கோரி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பதிவொன்றை இட்டிருந்தார். ஆனால், அந்தப் பதிவு “Draft – Pakistan’s PM Message on X” (வரைவு – பாகிஸ்தான் பிரதமரின் எக்ஸ் தள செய்தி) என்ற வாக்கியத்துடன் தொடங்கியிருந்தது.
சமூக வலைத்தளங்களில் இந்தப் பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே அந்த வாக்கியம் நீக்கப்பட்டு திருத்தப்பட்டது. எனினும், அதற்குள் அதன் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வைரலாகிவிட்டன.

ஒரு நாட்டின் பிரதமர் தனது செய்தியை ‘மூன்றாம் தரப்பில்’ (Pakistan’s PM) குறிப்பிடுவது வழக்கமல்ல. எனவே, இந்தச் செய்தி பாகிஸ்தான் அதிகாரிகளால் எழுதப்படாமல், அமெரிக்கா போன்ற வெளிப்புற இராஜதந்திர தரப்புகளால் தயார் செய்து வழங்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தப் பதிவில் பயன்படுத்தப்பட்டிருந்த மொழிநடை, அமெரிக்க இராஜதந்திர வார்த்தைப் பிரயோகங்களுடன் ஒத்துப்போவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாகிஸ்தான் ஒரு தன்னாதிபதிமிக்க நாடாகச் செயல்படாமல், வொஷிங்டனின் செய்திகளைப் பரிமாறும் ஒரு கருவியாகச் செயல்படுகிறதா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.
ஈரான் மோதல் உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமரின் இந்தத் தவறு அந்நாட்டு இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. செய்தி என்ன சொல்கிறது என்பதை விட, அந்தச் செய்தியை உண்மையில் எழுதுவது யார் என்பதே இப்போது முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.




