டெல்லி கெபிடல்ஸ் அணிக்கு எதிராக ஒரு ஓட்ட வித்தியாசத்தில் பரபரப்பு வெற்றியீட்டிய குஜராத் டைட்டன்ஸ் இம்முறை ஐபிஎல் தொடரில் இரு தோல்விகளின் பின் முதல் வெற்றியை பதிவு செய்தது.
டெல்லி, அருன் ஜெட்லி அரங்கில் நேற்று முன்தினம் (08) நடைபெற்ற இந்தப் போட்டியில் 211 ஓட்ட வெற்றி இலக்கை துரத்திய டெல்லி அணி கடைசி பந்துக்கு இரண்டு ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் அந்தப் பந்தை எதிர்கொண்ட டேவிட் மில்லர் துடுப்பெடுத்தாட தவறினார். என்றபோதும் ஒரு ஓட்டத்தை பெற முயன்றபோது எதிர்முனையில் இருந்த குல்திப் யாதவ் ரன் அவுட் செய்யப்பட்டார்.

இதனால் டெல்லி அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களையே பெற்றது. எனினும் டேவிட் மில்லர் கடைசி நேரத்தில் 20 பந்துகளில் 41 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றி வாய்ப்பை அதிகரித்திருந்தார்.
முன்னதாக துடுப்பாட்டத்தில் மீண்டும் ஒருமுறை சோபித்த பெத்தும் நிசங்க 24 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பெற்றதோடு கே.எல். ராகுல் 52 பந்துகளில் 92 ஓட்டங்களை விளாசினார்.
முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட குஜராத் அணியின் ஆரம்ப வரிசை சிறப்பாக செயற்பட்டதோடு அணித் தலைவர் சுப்மன் கில்லுடன் (70) ஜோஸ் பட்லர் (52) மற்றும் வொஷிங்டன் சுந்தர் (55) ஆகியோர் அரைச்சதம் பெற்றனர். இதன்மூலம் அந்த அணியால் 20 ஓவர்களுக்கும் 4 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களைப் பெற முடிந்தது.




