– மீண்டும் பேசுபொருளாக மாறிய எப்ஸ்டீன் கோப்புகள்
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், இருவரையும் இணைத்து பேசும் எந்தவொரு கருத்தையும் இன்றே முடிவுக்கு கொண்டு வாருங்கள் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியா ட்ரம்ப் கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை நடத்திய ஒரு திடீர் பத்திரிகையாளர் சந்திப்பில் , எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நாடாளுமன்ற விசாரணைகளை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவின் முதல் பெண்மணி அழைப்பு விடுத்தார்.
எப்ஸ்டீன் தன்னை டொனால்ட் ட்ரம்புக்கு அறிமுகப்படுத்தினார் என்ற ஒன்லைன் வதந்திகளையும் அவர் மறுத்தார். அவற்றை “எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் தீய எண்ணம் கொண்ட முயற்சிகள்” என்று அவர் குறிப்பிட்டார்.

மெலனியாவின் அறிவிப்புக்கான காரணம் என்ன என தெளிவாகத் தெரியவில்லை எனவும், எப்ஸ்டீன் குறித்து மெலனியா ஓர் அறிக்கை வெளியிடுவார் என்று அவரது அலுவலகத்திலிருந்து முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வௌியிடப்படவில்லை எனவும், அவரது கருத்துகள் வெள்ளை மாளிகையின் தினசரி அட்டவணையில் சேர்க்கப்பட்ட போதும், இவ்விடயம் தொடர்பில் எவ்வித அறிவிப்பும் வழங்கப்பட்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
2000ஆம் ஆண்டில் எப்ஸ்டீனுடன் அறிமுகம் மட்டுமே இருந்ததாகவும், தாம் அவரால் பாதிக்கப்பட்டதில்லை என்றும் அவர் கூறினார்.
“எப்ஸ்டீன், பாதிக்கப்பட்டவர்களைத் தவறாகப் பயன்படுத்தியது பற்றி எனக்கு ஒருபோதும் தெரிந்திருக்கவில்லை,” என்று அவர் கூறினார். “நான் எந்த வகையிலும் இதில் ஈடுபட்டதில்லை. நான் இதில் பங்கேற்றவள் அல்ல.” என்றும் மெலனியா அந்த சந்திப்பில் கூறினார்.
எப்ஸ்டீனின் கூட்டாளியான, சிறையில் உள்ள கிஸ்லைன் மெக்ஸ்வெல்லை தனக்குத் தெரியாது என்றும் அவர் மறுத்தார்.
எப்ஸ்டீன் கோப்புகளில் வெளியிடப்பட்ட, தனக்கும் மெக்ஸ்வெல்லுக்கும் இடையே 2002 இல் நடந்த ஒரு மின்னஞ்சல் பரிமாற்றத்தைக் குறிப்பிட்ட அவர், அதை ஒரு “சாதாரண கடித பரிமாற்றம்” மற்றும் ஒரு “நாகரிகமான பதில்” என்பதைத் தவிர வேறொன்றுமில்லை என்று கூறினார்.
அவர் குறிப்பிட்டதாகத் தோன்றும் ஒரு மின்னஞ்சல், “G” (அநேகமாக கிஸ்லைனைக் குறிக்கும்) என்பவருக்கு முகவரியிடப்பட்டுள்ளது. அதில், நியூயோர்க் இதழில் “JE” (ஜெஃப்ரி எப்ஸ்டீனாக இருக்கலாம்) பெயர் இடம்பெற்று, G இன் புகைப்படத்துடன் வெளியான ஒரு செய்திக்கட்டுரைக்கான பாராட்டுகளும் அடங்கியுள்ளன. பாம் பீச்சுக்குச் செல்ல “ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றும் அவர் எழுதியிருந்தார்.
“நீங்கள் நியூயோர்க்கிற்குத் திரும்பியதும் என்னை அழையுங்கள்,” என்று அந்த மின்னஞ்சலில் கூறப்பட்டுள்ளது.
“பயணம் இனிதாக அமையட்டும்! அன்புடன், மெலனியா” என அந்த உரையாடல் உள்ளது.
நியூயோர்க் இதழின் அந்தக் கட்டுரையில், தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், எப்ஸ்டீனை ஒரு “அற்புதமான மனிதர்” என்றும், “அவருடன் இருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும்” என்றும் கூறிய மேற்கோள்கள் இடம்பெற்றிருந்தன.
“அவர் என்னைப் போலவே அழகான பெண்களை விரும்புவதாகவும், அவர்களில் பலர் இளவயதினராக இருப்பதாகவும் கூட கூறப்படுகிறது.” என ட்ரம்ப் கூறியதாக அந்தச் செய்தி மேற்கோள் காட்டியது.
“இதில் சந்தேகமில்லை – ஜெஃப்ரி தனது சமூக வாழ்க்கையை அனுபவிக்கிறார்.” எனவும் ட்ரம்ப் பேசியதாக அந்த கட்டுரை விவரிக்கிறது.
மெலனியா ட்ரம்ப் மேலும் தெரிவிக்கையில், “பாதிக்கப்பட்டவர்கள், காங்கிரஸின் (அமெரிக்க நாடாளுமன்றம் ) முன் சத்தியப்பிரமாணம் செய்து சாட்சியமளிக்க வாய்ப்பளிக்க வேண்டும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார்.
“ஒவ்வொரு பெண்ணும் விரும்பினால், தனது அனுபவங்களை பொதுவெளியில் சொல்ல ஒரு நாள் இருக்க வேண்டும், பின்னர் அவரது சாட்சியம் நிரந்தரமாக அமெரிக்க நாடாளுமன்ற பதிவேட்டில் சேர்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். “அப்போது, அப்போது மட்டுமே, நமக்கு உண்மை கிடைக்கும்.” எனவும் மெலனியா கூறினார்.
எப்ஸ்டீனுடனான தொடர்புகள் குறித்த புதிய விவரங்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து, பல பிரபலமான வணிக நிறுவனங்களின் தலைவர்கள் சமீபத்திய மாதங்களில் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இந்த உண்மையை மெலனியா ட்ரம்ப் தனது உரையில் குறிப்பிட்டார்.
“நிச்சயமாக, இது குற்றத்திற்கு ஈடாகாது, ஆனால் உண்மையை வெளிக்கொணர நாம் வெளிப்படையாகவும் ஒளிவுமறைவின்றியும் செயல்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இந்த சந்திப்பில் அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை.
மெலனியா பேசிய சிறிது நேரத்திலேயே வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், அவை மேற்பார்வைக் குழு (House Oversight Committee) இலுள்ள மிகவும் சக்திவாய்ந்த ஜனநாயகக் கட்சி உறுப்பினரான கலிபோர்னியா பிரதிநிதி ரொபர்ட் கார்சியா, “பொது விசாரணை நடத்த வேண்டும் என்ற மெலனியா ட்ரம்பின் அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்” என்று கூறினார்.
அவர், நாடாளுமன்ற குழுத் தலைவரும் குடியரசுக் கட்சிப் பிரதிநிதியுமான ஜேம்ஸ் கோமரை, ” அமெரிக்காவின் முதல் பெண்மணியின் கோரிக்கைக்கையின் அடிப்படையில், உடனடியாக ஒரு பொது விசாரணையைத் திட்டமிடுமாறு” கேட்டுக் கொண்டுள்ளார்.
எப்ஸ்டீன் மீது குற்றம் சாட்டிய வர்ஜீனியா கிஃப்ரே, ஸ்கை மற்றும் அமண்டா ராபர்ட்ஸ் ஆகியோரின் குடும்பத்தினரும், பிற பாதிக்கப்பட்டவர்களும் பிபிசி நியூஸ்நைட்டில் பேசுகையில், “தாமாக முன்வந்து, முறைப்பாடுகளைப் பதிவுசெய்து, சாட்சியமளித்ததன் மூலம் ஏற்கனவே அசாதாரணமான தைரியம் காட்டப்பட்டுள்ளது” என்று கூறினர்.
“இப்போது அவர்களிடம் மேலும் சாட்சியமளிக்கக் கேட்பது பொறுப்பைத் தட்டிக்கழிப்பதே தவிர, நீதியல்ல,” என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.
எப்ஸ்டீன் தொடர்பான அனைத்து விசாரணை கோப்புகளையும் இன்னும் வெளியிடாத தனது கணவரின் நிர்வாக உறுப்பினர்கள் உட்பட, “அதிகாரத்தில் இருப்பவர்களை” முதல் பெண்மணி பாதுகாப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
“பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பங்கைச் செய்துவிட்டனர்,” என்று அவர்கள் கூறினர். “இப்போது அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்கள் பங்கைச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.” எனவும் அவர்கள் கூறினர்.
மெலனியா மற்றும் எப்ஸ்டீன் உறவு ஏற்கனவே சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.
உதாரணமாக, 2025 ஒக்டோபரில், டொனால்ட் ட்ரம்பும் அவரது மனைவியும் எப்ஸ்டீன் மூலம் சந்தித்தனர் என்ற “சரிபார்க்கப்படாத” கூற்றுகளை உள்ளடக்கிய ஒரு புத்தகத்தின் சில பகுதிகளைத் திரும்பப் பெறுவதாக ஹார்பர்காலின்ஸ் யுகே கூறியது. இதேபோல், டெய்லி பீஸ்ட், “எங்கள் தரத்தை இந்த செய்தி பூர்த்தி செய்யவில்லை” என்று ஒரு கட்டுரைக்காக மன்னிப்பு கேட்டு, அதைத் திரும்பப் பெற்றது.
எழுத்தாளர் மைக்கேல் வோல்ஃப் தனது ‘ஃபயர் அண்ட் ஃபியூரி’ என்ற புத்தகத்தில், எப்ஸ்டீனுடன் தொடர்புடைய ஒரு மாடலிங் ஏஜென்ட் மூலம் மெலனியா தனது கணவருக்கு முதன்முதலில் அறிமுகமானார் என்று கூறிய ஒரு கூற்று தொடர்பாக, அவருடன் ஒரு சட்டரீதியான நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.
1 பில்லியன் டொலர் அவதூறு வழக்குத் தொடரப்போவதாக மெலனியா மிரட்டியதைத் தொடர்ந்து, அவர் மீது எதிர் வழக்கை தொடர வோல்ஃப் நடவடிக்கை எடுத்தார்.
“நானும் எனது சட்டத்தரணிகளும் இந்த ஆதாரமற்ற மற்றும் அடிப்படையற்ற பொய்களை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடியுள்ளோம், மேலும் எனது நற்பெயரைத் தயக்கமின்றித் தொடர்ந்து பேணுவேன்,” என்று நேற்று மெலனியா கூறினார்.
வெள்ளை மாளிகையில் அவர் வெளியிட்ட இந்த அறிக்கையானது, முதல் பெண்மணியின் மிகவும் அரிதான ஒரு நடவடிக்கையாகும். அவரது கணவர் ட்ரம்ப் ஜனாதிபதி பதவிக்கு மீண்டும் திரும்பியதிலிருந்து, எளிதில் பேசாதவராகவும் அதே சமயம் செல்வாக்கு மிக்கவராகவும் நிரூபிக்கப்பட்டவர் மெலனியா. அவரின் வெகுசில அறிக்கைகளில் இதுவும் ஒன்று.
அமெரிக்காவின் முதல் பெண்மணியின் இந்த கருத்து, எப்ஸ்டீன் மீதான நீதித்துறையின் விசாரணை கையாளப்பட்ட விதம் மற்றும் அதன் கோப்புகள் பின்னர் வெளியிடப்பட்டது குறித்து தீவிரமான பொது விவாதத்தை மீண்டும் தூண்டக்கூடும்.
தனக்கு எப்ஸ்டீனை சிறிது காலம் தெரியும் என்பதை டொனால்ட் ட்ரம்ப் ஒப்புக்கொண்டாலும், பின்னர் அவர் ஒரு “அருவருப்பானவர்” என்பதால் பாம் பீச்சில் உள்ள தனது மார்-அ-லாகோ கிளப்பில் இருந்து அவரை வெளியேற்றியதாகக் கூறினார்.
வெளியிடப்பட்டுள்ள எப்ஸ்டீன் கோப்புகளில் ஜனாதிபதி ட்ரம்பின் பெயர் பல முறை குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர் தவறு செய்ததற்கான எந்த அறிகுறியும் அவற்றில் இல்லை.




