யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் அதிரடியால் மும்பை இந்தியன்ஸ் அணியை 27 ஓட்டங்களால் வீழ்த்திய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி தொடர்ந்து முன்றாவது வெற்றியை பெற்று ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு ஏற்றம் கண்டது.
குவாஹாத்தியில் நேற்று முன்தினம் (07) நடைபெற்ற போட்டி மழையால் 11 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட ராஜஸ்தான் அணிக்கு ஜெய்ஸ்வால் மற்றும் வைபவ் சூர்யவன்சி ஆரம்ப விக்கெட்டுக்கு பந்துகளை பறக்கவிட்டனர். இருவரும் 5 ஓவர்களிலேயே 80 ஓட்டங்களை விளாசினர்.

சூர்யவன்சி 14 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பெற்று வெளியேறியபோதும் 11 ஓவர்களுக்கும் முகம்கொடுத்த ஜெய்ஸ்வால் 32 பந்துகளில் 10 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 77 ஓட்டங்களை விளாசினார். இதன்மூலம் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களை பெற்றது.
எனினும் பதிலெடுத்தாடிய மும்பை அணி முக்கிய இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் 11 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 123 ஓட்டங்களையே பெற்றது. மும்பை அணி இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் சந்திக்கும் இரண்டாவது தோல்வி இதுவாகும்.




