பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் தமீம் இக்பாலை அந்நாட்டு கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக பங்களாதேஷ் அரசு நியமித்துள்ளது. அமினுல் இஸ்லாம் தலைமையிலான பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் பணிப்பாளர் சபை கலைக்கப்பட்ட நிலையிலேயே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபரில் நடந்த பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தேர்தலில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் பரிந்துரையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி 37 வயதாகும் தமீம் பங்களாதேஷ் சபையின் இளம் தலைவராக பதிவாகியுள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கான தேர்தல் அடுத்த மூன்று மாதங்களுக்குள் நடத்தப்படவிருப்பதோடு அந்தத் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாகவும் தமீம் தெரிவித்தார்.
பங்களாதேஷ் அணிக்காக அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 391 சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கும் தமீம் 2025 இல் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற பின்னரும் உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார். எனினும் அந்த ஆண்டு நடைபெற்ற டாக்கா பிரீமியர் லீக் போட்டியின்போது மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து தனது கிரிக்கெட் வாழ்விலிருந்து விடைபெற்றார்.




