19 வயதுக்கு உட்பட்ட மகளிர் முக்கோணத் தொடரில் நேற்று நடைபெற்ற அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை இளையோர் அணி கடைசி வரை போராடி 1 விக்கெட்டால் தோல்வியை சந்தித்தது.

பிரிஸ்பானில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில் 49.3 ஓவர்களில் 174 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர். ஆரம்ப வீராங்கனை விமொக்ஷா பாலசூரிய அதிகபட்சமாக 25 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் மியா பர்விக் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த அவுஸ்திரேலிய இளையோர் மகளிர் அணிக்கு இலங்கை பந்துவீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர். சிறப்பாக பந்துவீசிய அசேனி தலகுன 5 விக்கெட்டுகளை பதம்பார்த்ததோடு நித்மி உபேக்ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த அவுஸ்திரேலிய வீராங்கனைகள் கடைசி விக்கெட்டிலேயே வெற்றி இலக்கை எட்டினர். இதன்மூலம் அந்த அணி 43.1 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 175 ஓட்டங்களை எட்டியது. குறிப்பாக இந்திரா பனெலி 59 ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு உதவினார்.
இந்த முக்கோண தொடரில் இலங்கை இளையோர்கள் தனது அடுத்த போட்டியில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து இளையோர்களை எதிர்கொள்ளவுள்ளது.




