ஈரான்–அமெரிக்காவின் போர் நிறுத்தத்திலும் லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல் வளைகுடா நாடுகளிலும் தாக்குதல்கள் நீடிப்பு

3 Min Read

மத்திய கிழக்கு முழுவதும் பரவி, சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடியை ஏற்படுத்திய ஆறு வாரங்கள் நீடித்த போரில் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வாரங்கள் போர் நிறுத்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளது.

அமெக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரானுக்கு விதித்த காலக்கெடு முடிவதற்கு சில மணி நேரம் இருக்கும்போதே கடந்த செவ்வாய்க்கிழமை இந்த போர் நிறுத்தம் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இது பல பிராந்திய நாடுகளிலும் அமைதியை ஏற்படுத்தி இருப்பதோடு சர்வதேச நிதிச் சந்தையிலும் ஆறுதலை உருவாக்கியுள்ளது.

எவ்வாறாயினும் இஸ்ரேல் ஈரான் மீதான தாக்குதல்களை நிறுத்தியபோதும் லெபனானில் தனது உக்கிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரான் உடனான போர் நிறுத்தத்தின் பின்னர் நேற்று இடம்பெற்ற தாக்குதல்களில் பலரும் கொல்லப்பட்டிருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் அமெரிக்கா மற்றும் ஈரான் இரு தரப்பும் வெற்றி பிரகடனத்தை வெளியிட்டபோதும், இரு தரப்புக்குமான முரண்பாடுகள் இன்னும் தீர்க்கப்படாது உள்ளன. இரு தரப்பும் தமது நிலைப்பாடுகளில் உறுதியாக இருக்கும் நிலையில் எட்டப்படும் உடன்படிக்கை மத்திய கிழக்கின் எதிர்காலத்தில் தாக்கத்தை செலுத்தும் ஒன்றாக அமைய வாய்ப்பு உள்ளது.

இந்த போர் நிறுத்த பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட ஈரான் மூத்த அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கூறியதாவது பாகிஸ்தானில் நாளை வெள்ளிக்கிழமை (10) திட்டமிடப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தையை ஒட்டி ஹோர்முஸ் நீரிணை வியாழன் (இன்று) அல்லது வெள்ளிக்கிழமை திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஈரானை இலக்கு வைத்து கடந்த ஆறு வாரங்களாக ஒவ்வொரு நாளும் இடைவிடாது நடத்திய கடுமையான வான் தாக்குதல்களை இடைநிறுத்துவதாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நேற்று அறிவித்தன.

எனினும் லெபனானில் பெய்ரூட் நகர் உட்பட பல இடங்களிலும் இஸ்ரேலின் குண்டு மழை பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ன. இந்தத் தாக்குதல்கள் வழக்கமான முன்னெச்சரிக்கைகள் இன்றி நடத்தப்படுவதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மறுபுறம் வளைகுடா நாடுகளான குவைட், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைனில் தொடர்ந்து ஈரானின் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் தாக்கி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. சவூதி அரேபியாவில் செங்கடலுக்கான எண்ணெய் குழாய் மீது தாக்குதல்கள் இடம்பெற்றிருப்பதாக இரு தரப்புகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த குழாய் முடக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணைக்கு மாற்று வழியாக செயற்படுவதாக உள்ளது.

இஸ்லாமாபாத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சந்திப்புக்காக ஈரான் மற்றும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்ததாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷரீப் தெரிவித்துள்ளார். இது போரை ஒட்டி முதலாவது உத்தியோகபூர்வ அமைதி முயற்சியாக உள்ளது. இதில் ஈரான் பங்கேற்கும் என்பதை அந்நாட்டு ஜனாதிபதி உறுதி செய்துள்ளார். எனினும் இதில் பங்கேற்பது குறித்து அமெரிக்கா தரப்பில் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க தூதுக்குழுவுக்கு தலைமை வகிக்க வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் டிரம்ப் நேற்றுக் காலை வெளியிட்ட அறிவிப்பில் ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கும் நாடுகளின் அனைத்து பொருட்களின் மீதும் 50 வீத சுங்க வரி விதிப்பதாக குறிப்பிட்டார். ஈரானில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றிருப்பதாக வலியுறுத்திய அவர் அணு ஆயுதத்திற்கு பயன்படுத்தும் யுரேனிய செறிவூட்டலை செய்வதில்லை என்று ஈரான் இணங்கியதாகவும் தெரிவித்துள்ளார். சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் 20 வீத பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு ஈரான் இணங்கியதாக அமெரிக்கா கூறியபோதும் அது போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றின் மூலமே எட்டப்பட வேண்டும் என ஈரான் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இணக்கம் எட்டப்பட்டால் ஆரம்பக் கட்டமாக நீரிணை திறக்கப்படுவது மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும், கப்பல்கள் அதனூடே செல்ல ஈரானின் அனுமதியை தொடர்ந்தும் பெற வேண்டி இருக்கும் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *