– இனி வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை
– வீட்டிலிருந்தே சேவைகளைப் பெற புதிய வசதி
இலங்கையின் பழமையான அரச நிறுவனங்களில் ஒன்றான பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் 161 ஆவது பெருமைக்குரிய ஆண்டு நிறைவை முன்னிட்டு, பொதுச் சேவைகளை நவீனமயமாக்கும் விசேட திட்டமாக அழைப்பு மையத்தைத் திறத்தல் மற்றும் நவீனமயமாக்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளத்தை வெளியிடுதல் என்பன பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தலைமையில் நேற்று (07) திணைக்கள வளாகத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர், தற்போதைய சவால்களை முறியடிக்க டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை இன்றியமையாதது எனச் சுட்டிக்காட்டினார். இந்த நவீனமயமாக்கல் திட்டத்தின் ஊடாக, அரசாங்கத்தின் பிரதான இலக்கான அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு நேரடி பங்களிப்பை வழங்க எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வு போன்ற பல்வேறு நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், நீண்ட தூரம் அலுவலகங்களுக்கு வந்து வரிசையில் காத்திருப்பதற்குப் பதிலாக, வீட்டிலிருந்தே சேவைகளைப் பெற்றுக்கொள்ள இதன் மூலம் சந்தர்ப்பம் கிட்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் திரு. ருவன் செனரத் கருத்துத் தெரிவிக்கையில், பதிவாளர் நாயகம் திணைக்களம் என்பது வெறும் அரசாங்க அலுவலகம் மாத்திரமல்ல, இந்நாட்டுப் பிரஜை ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான எழுதப்பட்ட வரலாறு மற்றும் சட்டப்பூர்வ அடையாளத்தைப் பாதுகாக்கும் இடமாகும் எனக் குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அழைப்பு மையம் நிறுவப்பட்டுள்ளதுடன், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தகவல்களைப் பெறக்கூடிய பயனர் நட்பு இணையதளமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.




