எக்காரணத்திற்காகவும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – பாதுகாப்பு நிமித்தம் ஒருதொகை எரிபொருள் கையிருப்பில்

2 Min Read

எரிபொருள் விநியோகக் கட்டமைப்பை உறுதியானதாகப் பேணுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையில் எக்காரணத்திற்காகவும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகம், மின்சார உற்பத்தி மற்றும் விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கும் தேவையான எரிபொருள் போதுமான அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு நிமித்தம் ஒருதொகை எரிபொருள் கையிருப்பிலும் வைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (07) நிலையியற் கட்டளை 27 / 2 இல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவர் தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

”எரிபொருள் விநியோகக் கட்டமைப்பை உறுதியான தன்மையில் பேணுவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எந்த வகையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.

ஒரு மாதத்துக்கு 154,583 இலட்சம் மெ.தொன் மசகு எண்ணெய், 93,066 மெ.தொன் ஒட்டோ டீசல், 2411 மெ.தொன் சுப்பர் டீசல், 72804 மெ. தொன் ஒக்டேன் 92 ரக பெற்றோல், 2160 மெ.தொன் 95 ரக ஒக்டேன் பெற்றோல், 44,000 மெ.தொன் உராய்வு எண்ணெய் தேவைப்படுகிறது.

எரிபொருள் விநியோகம், மின்சார உற்பத்தி மற்றும் விமான போக்குவரத்துக்கு தேவையான எரிபொருள் போதுமான அளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருள் விற்பனை செய்யப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தேர்தல் காலத்தில் குறிப்பிட்டார்.அந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சபையில் கேள்வி எழுப்புகின்றார். சஜித் பிரேதாச உண்மையில் கோமாவில் இருந்து மீண்டு இவ்வாறான கேள்விகளை கேட்கின்றாரா என்று எமக்குத் தெரியவில்லை.

மத்திய கிழக்கில் யுத்த நிலைமை தீவிரமடைந்ததன் பின்னர் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது. உண்மையை மக்கள் நன்கு அறிவார்கள். உலக சந்தையின் எரிபொருள் விலையேற்றத்தின் சுமையை மக்கள் மீது முழுமையாக சுமத்தவில்லை.எரிபொருள் விலையேற்றத்தின்போது ஒரு லீற்றர் டீசலுக்கு அரசாங்கம் ரூ. 100 ஐயும் , 92 ரக பெற்றோலுக்கு ரூ. 20 ஐயும் செலுத்துகிறது.

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு ரூ. 884 மில்லியன் நட்டமேற்படுத்தியவர்கள் தான் இன்று எரிபொருள் நிவாரணம் தொடர்பில் பேசுகின்றார்கள். நெருக்கடியான நிலையில் எரிபொருள் விநியோகஸ்தர்கள் தமக்கான கட்டணத்தை 57 சதவீதத்தால் அதிகரிக்குமாறு கூறுகின்றார்கள்.அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றினால் எவ்வாறு எரிபொருள் விநியோகத்தை முன்னெடுப்பது? மக்களை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு கிடையாது.எரிபொருள் விலை குறைவடையும் போது அதன் பயனை மக்களுக்கு வழங்குவோம்.

தற்போதைய நெருக்கடி நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும். பாராளுமன்றத்தில் உண்மையான சஜித் பிரேதமதாச கேள்வியெழுப்புகிறாரா அல்லது ஏஐ , சஜித் பிரேமதாச கேள்வியெழுப்புகிறாரா என்று தெரியவில்லை” என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *