நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இலங்கை ஏ அணி அபார வெற்றி

2 Min Read

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதலாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை ஏ அணி 140 ஓட்டங்களால் அபார வெற்றியை பெற்றதோடு மூன்று போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் 1–0 என முன்னிலை பெற்றது.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி நேற்று (05) காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. அதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை ஏ அணிக்கு ஆரம்ப வீரர் கமில் மிஷார 49 பந்துகளில் 2 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 71 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் அணித் தலைவர் சஹன் ஆரச்சிகே (66) மற்றும் மிலான் ரத்னாயக்க (53) ஆகியோர் அரைச் சதம் பெற்றனர். இதன்மூலம் இலங்கை ஏ அணி 49.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 261 ஓட்டங்களைப் பெற்றது.

குறிப்பாக இலங்கை ஏ அணி சாரபில் 6 ஆவது விக்கெட்டுக்கு சஹன் ஆரச்சிகே மற்றும் மிலான் ரத்னாயக்க இருவரும் 110 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இதன்போது இருவரும் மிக நிதானமாக ஆடியே ஓட்டங்களை அதிகரித்தனர். ஆரச்சிகே தனது 66 ஓட்டங்களைப் பெற 81 பந்துகளுக்கு முகம்கொடுத்ததோடு ரத்னாயக்க 89 பந்துகளுக்கே 53 ஓட்டங்களைப் பெற்றார். இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த நியூசிலாந்து ஏ அணிக்கு இடது கை சுழற்பந்து வீச்சாளர் வனுஜ சஹன் நெருக்கடி கொடுத்தார். அவர் 6.4 ஓவர்களில் வெறும் 13 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். அதபோன்று சொனால் தினுஷ 5 ஓவர்கள் பந்து வீசி 10 ஓட்டங்களை மாத்திரம் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நியூசிலாந்து ஏ அணி 28.4 ஓவர்களில் 121 ஓட்டங்களுக்கே சுருண்டது. ஆரம்ப வீரர் டெல் பிலிப்ஸ் அதிகபட்சம் 30 ஓட்டங்களைப் பெற்றார்.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் புதன்கிழமை (08) ஹம்பாந்தோட்டையில் பகல் ஆட்டமாக காலை 10 மணிக்கு ஆரம்பமாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *