உடல் தகுதியில் தோல்வியுற்ற செய்தியை அசலங்க நிராகரிப்பு

1 Min Read

இலங்கை கிரிக்கெட் சபை நடத்தும் உடல் தகுதி சோதனையில் தோல்வியுற்ற வீரர்களில் தமது பெயரும் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை இலங்கை ஒருநாள் அணித் தலைவர் சரித் அசலங்க நிராகரித்துள்ளார்.

தேவையான புள்ளிகளைப் பெற்று உடற்தகுதி சோதனையில் தேர்ச்சி பெற்றதாக குறிப்பிட்டிருக்கும் அசலங்க, ஊடக நிறுவனங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

தேவையான உடல் தகுதியை பூர்த்தி செய்ததை அடுத்து லீக் கிரிக்கெட்டில் பங்கேற்பதற்கான தடையில்லா சான்றிதழை அசலங்க பெற்றிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. உள்ளூர் தொலைக்காட்சி செய்தி ஒன்றில் வெளியிடப்பட்ட உடல் தகுதி சோதனையில் தோல்வியுற்ற வீரர்கள் பட்டியலில் தமது பெயர் இருப்பதை தினேஷ் சந்திமால் உட்பட மேலும் பல வீரர்களும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அணித் தேர்வில் உடல் தகுதியை நிரூபிப்பதை இலங்கை கிரிக்கெட் சபை வீரர்களுக்கு கட்டாயமாக்கியுள்ளது. தேவையான தகுதியை நிரூபிக்காத வீரர்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு லீக் கிரிக்கெட்டுகளில் ஆடுவதற்கான தடையில்லா சான்றிதழ் அனுமதியை வழங்குவதையும் இலங்கை கிரிக்கெட் சபை நிராகரித்துள்ளது.

இதனால் ஏற்கனவே உடல் தகுதியை நிரூபிக்க தவறிய வேகப்பந்து வீச்சாளர் நுவன் துஷார இலங்கை கிரிக்கெட் சபைக்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய பிரீமியர் லீக்கில் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகி இருக்கும் துஷாரவுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்படாததால் அவரால் ஐபிஎல் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *