இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்திய சம்பியன்ஸ் கிண்ண நொக் அவுட் தொடரின் இறுதிப் போட்டியில் சோண்டர்ஸ் அணியை பெனால்டி சூட் அவுட் முறையில் வீழ்த்திய யாழ்ப்பாணம், சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம் வரலாற்றில் முதல்முறை பிரதான கிண்ணம் ஒன்றை வென்றுள்ளது.
கொழும்பு, குதிரைப்பந்தய திடலில் நேற்று முன்தினம் (04) நடைபெற்ற இறுதிப் போட்டியில் மூன்றாவது நிமிடத்திலேயே சென் மேரிஸ் கோல் பெற்ற நிலையில் ஒரு நிமிடம் கழித்து சோண்டர் பதில் கோல் திருப்பியது. முன்கூட்டியே கோல்கள் பெறப்பட்டபோதும் எஞ்சிய முழு நேரத்திலும் இரு அணிகளாலும் ஒரு கோலைக் கூட திருப்ப முடியாமல் போனது.

குறிப்பாக சோண்டர்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தி எதிரணி கோல் கம்பத்தை பல தடவைகள் ஆக்கிரமித்தாலும் சென் மேரிஸ் அணியின் தற்காப்பு ஆட்டம் வலுவாக இருந்தது. இதனால் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் ஒரு கோலை பெற்றிருந்தன.
இந்நி லையில் முடிவை தீர்மானிப்பதற்கு பொனால்டி சூட் அவுட் பயன்படுத்தப்பட்டதோடு அதில் சென் மேரிஸ் 3–1 என வெற்றியீட்டியது. குறிப்பாக சென் மேரிஸ் கோல்காப்பாளர் ஆர்னிகன் 3 தடுப்புகளைச் செய்து அந்த அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இதன்மூலம் இலங்கை கால்பந்து சம்மேளனம் நடத்தும் பிரதான தொடர் ஒன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கழகம் ஒன்றாக சம்பியன்ஸ் கிண்ணத்தை சென் மேரிஸ் வெல்வது முதல் முறையாக இருந்தது.
முன்னதாக நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் தொடரில் சுப்பர் எட்டு சுற்றுவரை முன்னேறியதன் மூலமே சென் மேரிஸ் இந்த நொக் அவுட் தொடரில் ஆடத் தகுதி பெற்றது. இந்தத் தொடரில் ஆரம்ப சுற்றில் நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தையும் அரையிறுதியில் ஜாவா லேன் அணியையும் வீழ்த்தியே சென் மேரிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
1936 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கழகம், 2022 ஆம் ஆண்டிலேயே சம்பியன்ஸ் லீக் தொடருக்குத் தரம் உயர்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் நான்கு வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட சம்பியன்ஸ் லீக் கால்பந்தாட்டத்தில் முதல் தடவையாக களமிறங்கிய யாழ்ப்பாணம் சென். மேரிஸ் கழகம் 8ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.
இதற்கமைய, சம்பியன் பட்டம் வென்ற யாழ்ப்பாணம் சென். மேரிஸ் கழகத்துக்கு ஒரு மில்லியன் ரூபாயும், இரண்டாம் இடத்தைப் பெற்ற சோண்டர்ஸ் கழகத்துக்கு 5 இலட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.




