துடுப்பாட்டத்தில் சோபித்தார் பெத்தும்

1 Min Read

முதல்முறையாக டெல்லி கெபிடல்ஸ் அணிக்காக அறிமுகம் பெற்றிருக்கும் இலங்கை ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிசங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் துடுப்பாட்டத்தில் சோபித்ததோடு அந்தப் போட்டியில் டெல்லி அணி இரண்டாவது வெற்றியை பெற்றது.

டெல்லியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களையே பெற்றது. தொடர்ந்து பதிலெடுத்தாட வந்த டெல்லி அணிக்கு ஆரம்ப வீரராக பெத்தும் நிசங்க 30 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் 1 சிக்ஸருடன் 44 ஓட்டங்களை பெற்றார். நிசங்க தனது முதல் போட்டியில் 1 ஓட்டத்துடன் ஆட்டமிழந்த நிலையிலேயே துடுப்பாட்டத்தில் சோபித்துள்ளார்.

அதேபோன்று அபாரமாக துடுப்பெடுத்தாடிய சமீர் ரிஸ்வி 51 பந்துகளில் 90 ஓட்டங்களை விளாசினார். இதன்மூலம் டெல்லி அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இதன்மூலம் டெல்லி அணி தனது முதல் இரு போட்டிகளிலும் வெற்றியீட்டி ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது.

இதேவேளை நேற்று முன்தினம் நடந்த மற்றொரு போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்திய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி ராஜஸ்தான் அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களை பெற்ற நிலையில் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 204 ஓட்டங்களையே பெற்றது.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *