11 கி.கி சட்டவிரோத போதைப்பொருளுடன் நபரொருவர் கைது – அதன் பெறுமதி சுமார் ரூ. 11 கோடி என மதிப்பீடு

1 Min Read

சுமார் ரூ. 11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பிரஜை ஒருவரை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளனர்.

கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய கூலித் தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து ஏ.ஐ.- 277 (AI-277) ரக ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று (06) காலை 6.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து 11 கி.கி 340 கிராம் எடையுடைய “குஷ்” போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் ரூ. 11 கோடியே 34 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சொக்லேட் பக்கெட்டுகளுக்குள் இருந்த சொக்லேட்டுகளை அகற்றிவிட்டு, அதற்குப் பதிலாக 12 பொதிகளில் இந்த போதைப்பொருள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, தனது பயணப் பொதியை விமான நிலையத்திலேயே கைவிட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்ற போதே குறித்த நபர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் என்பன மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *