நாட்டில் உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிப்பதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் அது தொடர்பாக எந்தவொரு கலந்துரையாடலும் நடைபெறவில்லை. என சுட்டிக்காட்டிய அமைச்சர்,அரசியல் ரீதியாக முன்வைக்கப்படும் இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நான் நிராகரிக்க வேண்டிய அவசியமும் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள நீதியமைச்சர்,
அரசாங்கம் நீதித்துறையின் தற்போதைய கட்டமைப்பில் தலையிடவில்லை. முன்னாள் அமைச்சர்களான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் விஜேதாச ராஜபக்ச ஆகியோர் அண்மையில் விடுத்திருந்த அறிக்கையில், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையை மீறும் செயல் எனத் தெரிவித்திருந்தனர். சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனும் கோட்பாட்டிற்கு இது முரணானது என்றும் அவர்கள் வாதிட்டிருந்தனர்.
அரசியலமைப்பின் 107 ஆவது உறுப்புரையின் கீழ், உயர் நீதிமன்ற நீதியரசர்களின் பதவிக்காலம் மற்றும் சுதந்திரம் தொடர்பான பாதுகாப்பு தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
அரசியலமைப்பின் 107(5) உறுப்புரையின்படி,உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 65 என்பதுடன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பேணுவதற்காக இந்த வயதெல்லைகள் அரசியலமைப்பில் உள்ளீர்க்கப்பட்டுள்ளன.
இதில் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்வதாயின், அதற்கு முறையான அரசியலமைப்பு திருத்தம் அவசியமாகும்.
தற்போதைய நிலையில் அத்தகைய எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





