டாடா அறக்கட்டளையில் இருந்து வேணு ஸ்ரீனிவாசன் விலகிய நிலையில், அதன் பின்னணி குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.
டாடா அறக்கட்டளையில் இருந்து விலகிய வேணு ஸ்ரீனிவாசன்
டாடா குழுமத்தின் கீழ் செயல்படும் ‘ பாய் ஹிராபாய் ஜம்ஷெட்ஜி டாடா நவசாரி அறக்கட்டளையில் தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் குழும தலைவர் வேணு சீனிவாசன் மற்றும் விஜய் சிங் ஆகியோர் துணைத் தலைவர்களாக இருந்தனர்.

1923 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பாய் ஹிராபாய் ஜம்ஷெட்ஜி டாடா நவசாரி அறக்கட்டளை நிறுவனம் (BHJTNCI), குஜராத்தின் நவசாரியில் உள்ள பார்சி மக்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் ஒரு தொண்டு நிறுவனமாகும்.
இந்நிலையில், இருவருக்கும் அறக்கட்டளையில் இருக்க தகுதி இல்லை என மகாராஷ்டிர அறக்கட்டளை ஆணையரிடம் முன்னாள் அறக்கட்டளை உறுப்பினர் மெஹ்லி மிஸ்ட்ரி ஒரு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
தகுதி சர்ச்சை
இதில், அறக்கட்டளையில் இருப்பவர்கள் கண்டிப்பாக பார்சி மதத்தை பின்பற்ற வேண்டும் மற்றும் மும்பையில் நிரந்திர வசிப்பிடம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.

இவர்கள் இருவரும் பார்சி ஜொராஸ்ட்ரியன் மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல மற்றும் மும்பையில் நிரந்தர வசிப்பிடத்தைக் கொண்டிருக்கவில்லை எனவும் அதில் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.
இவர்களை தகுதி நீக்கம் செய்வதோடு, இது தொடர்பாக மாநில அறக்கட்டளை ஆணையர் விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பணிச்சுமை காரணமாக பாய் ஹிராபாய் ஜம்ஷெட்ஜி டாடா நவசாரி அறக்கட்டளையில் இருந்து விலகுவதாக வேணு சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

ஆனால் மெஹ்லி மிஸ்ட்ரி கொடுத்த புகாரின் காரணமாகவே வேணு சீனிவாசன் விலகியதாக கூறப்படுகிறது. வேணு சீனிவாசன் ஏற்கனவே 7 டாடா அறக்கட்டளைகளில் உறுப்பினராக உள்ளார்.




