புத்தளம் நகரின் சுத்தத்தையும் கழிவு முகாமைத்துவ முறையையும் மேம்படுத்தும் நோக்கில், புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்ஷாட் அஹ்மட் தலைமையின் கீழ் புத்தளம் மாநகர சபையினால் பல்வேறு முன்னோடியான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதன் முக்கிய நடவடிக்கைகளாக“Ocean Strainers” சாதனங்கள் மேலும் இரண்டு பிரதான கால்வாய்களில் நிறுவப்பட்டுள்ளன. இதன்மூலம் பிளாஸ்டிக் மற்றும் கழிவுகள் கடலுக்குள் செல்வதைத் தடுப்பதற்கு இலகுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், புத்தளம் கலப்பில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றும் விரிவான சுத்திகரிப்பு வேலைத்திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்துடன், அன்றாட கழிவுகளை சரியான முறையில் நிர்வகிக்க பொதுமக்களுக்கு தேவையான வசதிகளும், முறையான விழிப்புணர்வுகளும் புத்தளம் மாநகர சபையினால் வழங்கப்படவுள்ளன.
அத்தோடு, கழிவு பிரித்தல் & மறுசுழற்சி மேம்பாடு திட்டத்திற்காக சுமார் இரண்டு கோடி ரூபா செலவில் நவீன Material Recovery Facility மையம் ஒன்றும் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டர் அமைப்புகளுடன் இணைந்து கழிவு மேலாண்மை வலுப்படுத்தும் விஷேட வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்ஷாட் அஹ்மட் தெரிவித்தார்.
புத்தளம் நகரின் சுத்தத்தையும் , கழிவு முகாமைத்துவ முறையையும் மேம்படுத்தும் மேற்படி திட்டம் வெற்றியடைவதற்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் புத்தளம் மாநகர மேயர் பொறியியலாளர் ரின்ஷாட் அஹ்மட் மேலும் கூறினார்.




