பதினைந்து வயது வைபவ் சூர்யவன்சி இந்திய பிரீமியர் லீக்கில் மூன்றாவது அதிவேக அரைச் சதத்தைப் பெற்று சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்ட உதவினார்.
குவாஹாத்தியில் நேற்று முன்தினம் (30) நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் தமது ஆரம்ப ஆட்டத்தில் களமிறங்கியதோடு முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சென்னை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இதனால் அந்த அணி 19.4 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கே சுருண்டது.

முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களும் ஒற்றை இலக்கத்துடன் ஆட்டமிழந்ததோடு பின்வரிசையில் வந்த ஜெமி ஓவர்டன் 36 பந்துகளில் அட்டமிழக்காது 43 ஓட்டங்களை பெற்றார். ஜெப்ரி ஆர்ச்சர், நன்ட்ரே பெர்கர் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த ராஜஸ்தான் றோயல்ஸ் அணிக்கு சூர்யவன்சி அதிரடி காட்டினார். 15 பந்துகளிலேயே அவர் 50 ஓட்டங்களை எட்டினார். இது 2023 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தானின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்ற அதிவேக அரைச்சதத்தை விடவும் இரண்டு பந்துகள் மாத்திரமே குறைவாகும். அவர் 17 பந்துகளில் 4 பௌண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 52 ஓட்டங்களை பெற்றார்.
இதன்மூலம் ராஜஸ்தான் றோயல்ஸ் அணி 12.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்று இலகு வெற்றியீட்டியது.




