கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் உயிரிழப்பு

1 Min Read

பீகாரில், கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

கோவிலில் நெரிசலில் 8 பெண்கள் உயிரிழப்பு

பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள மக்ரா கிராமத்தில் அமைந்துள்ள ஷீத்லா மாதா கோவிலில் சித்திரை மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை மற்றும் மஹாவீர் ஜெயந்தி என்பதால் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

சில பக்தர்கள் தரிசனம் செய்யும் அவசரத்தில், வரிசையை மீறி ஒருவரை தாண்டி ஒருவர் செல்ல தொடங்கியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, ஒருவர் மீது ஒருவர் விழுந்து ஏறி சென்றனர்.

கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி 8 பெண்கள் உயிரிழப்பு | 8 Women Dies In Nalanda Sheetla Temple Stampede

இதில், தற்போது வரை 8 பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், 6க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்ட நெரிசல் குறித்த தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, மீட்பு நடவடிக்கையைத் தொடங்கினர்.

இதில், காயமடைந்தவர்கள் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் போதிய அளவில் காவல்துறையினர் பாதுகாப்பில் இல்லை என குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நாளந்தா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள, ஜனாதிபதி திரௌபதி முர்முவும் நாளந்தாவில் இருப்பதால், காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *